அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்திபொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கவலை தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான கைதுகளால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஜனநாயக அரசியலுக்கான எச்சரிக்கையாகவே ரியாஜ் பதியுதீனின் கைதையும் குற்றச்சாட்டுக்களையும் நோக்க முடிகின்றது. ஈஸ்டர் தாக்குதலுக்கும் ரிஷாட் பதியுதினீன் குடும்பத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுக்களின் விசாரணைகளிலும் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில்ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இன்று புதிய காரணம் கண்டறிந்து. ரியாஜ் பதியுதீனை கைது செய்துள்ளமையானதுஅரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சலாகும். பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்தும் தடுக்க முடியாமல்போன இத்தாக்குதல் பற்றி, எந்தப் புலனாய்வுப் பிரிவினரும் அறிந்திருக்கவில்லை.

வர்த்தகரான ரியாஜ் பதியுதீன், பல தரப்பு வர்த்தகர்களுடனும் தொடர்புகளைப் பேணிய ஒருவர். இவ்வாறான தொடர்புகளின் போதே, அவர் பிரபல வர்த்தகர்களான இப்ராஹிம் ஹாஜியார், அலாவுதீன் மற்றும் அவரின் மருமகனான இந்தக் குண்டுதாரியுடனும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை பேணியிருக்கலாம். இவ்வாறான தொடர்புகளை தாக்குதல் திட்டத்துக்கான தொடர்புகளாக கற்பனை செய்வதில் என்ன நியாயம்?

வெளிநாடு செல்வதாக மனைவியர்களிடம் கூறிய கணவன்மாரே, மறுநாள் குண்டுதாரிகளாக வெடித்துள்ளனர். எனவே, கடைசி நிமிடங்கள் வரை மனைவியரே அறிந்திராத இவர்களின் திட்டத்தை, ஒருசில மாதத்திற்கு முன்னர் வர்த்தக நோக்கில் தொடர்பை வைத்திருந்தவரால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?

எனவே, இவற்றை அவதானிக்கின்றபோது, ரியாஜ் பதியுதீன் மீதான பொலிஸாரின் அறிக்கை, குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுகளாகத் தெரிகின்றது” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS