பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று, எதிர்க்கட்சிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையெனவும், பாராளுமன்றத்தை ஒருபோதும் மீண்டும் கூட்டப்போவதில்லை என அவர்கள் அறிவித்த பின்னர், அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதில் பயன் ஏற்படப்போவதில்லை எனவும் முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்துக்கான ஆயத்தங்களின் போது, பொதுஜன பெரமுனவினர் தமக்கு வசதியான அத்தனை இனவாத ஊடகங்களையும் வரவழைத்து,  எதிர்க்கட்சியினரின் உரைகளை பதிவு செய்து, மக்கள் மக்தியில் ஒரு பிழையான அர்த்தத்தையே பரப்ப முயற்சிப்பர். வெறுமனே இந்தக் கூட்டம் ஒரு நாடக பாணியிலேயே அமையப் போகின்றது. எனவே, எதிர்க்கட்சிகள் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

52 நாள் சட்டவிரோத அரசாங்கத்தின் போது, அவர்கள் சார்ந்த சிரேஷ்டமான ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர், பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை மிகவும் சரியானதென அறிதியிட்டுச் சொன்னார். இறுதியில் நீதி உயிர்வாழ்ந்ததினால் ஜனநாயகம் மீண்டும் காப்பாற்றப்பட்டு, பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக செயற்பட வழிவகுக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் ஒவ்வொருவரினதும் வீட்டு வாசலை தட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்தில் உறைந்துகிடக்கின்றனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனால் முறையான திட்டங்களை அமுல்படுத்த முடியாதும், திறைசேரியில் போதியளவு நிதிகளைப் பெறமுடியாதும் துரதிஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது. 19 வது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு உட்பட எந்தவொரு அமைச்சையும் அரசியல் அமைப்பின்படி, அவரால் வைத்திருக்க முடியாது. இந்த நிலையில் ஜனாதிபதி மிகவும் அனுபவம் வாய்ந்தவரெனவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து திறம்படப் பணியாற்றியவர் எனவும் அரசாங்க முக்கியஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

ஜூன் 02ஆம் திகதிக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டாவிட்டால் எந்தவிதமான நிதிகளையும் ஜனாதிபதியினால் பெற்றுக்கொள்ள முடியாது. இதுவே யதார்த்தம். எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரப்படுகின்றது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மஹிந்தானந்த போன்ற ஆளுங்கட்சியின் வாய்ச்சவடால் வீரர்கள் ஊடகங்களில் வந்து, கொரோனா பாதிப்புப் பற்றி எந்தவிதமான கவலையும் இல்லாமல் தேர்தலைப் பற்றியே பிதற்றுகின்றனர்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் நாட்டின் அச்சமான, துன்பமான சூழலைக் கருத்திற்கொண்டு, மனிதாபிமான ரீதியில் சிந்திக்கின்றனர். மக்களை ஆபத்தில் தள்ள அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. கொரோனாவை ஒழிக்கும் வரை தேர்தல் நடத்த முடியாத சூழலிலேயே, அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், நாட்டு நலனுக்காக இணைந்து செயற்படவும் தயாரென அறிவித்துள்ளனர்.

எனினும், அரசாங்கம் அடம்பிடிக்கின்றது. ஏப்ரல் 19ஆம் திகதிக்கிடையில் கொரோனா முடிவுக்கு வருமென கூறிய சுகாதார அமைச்சர், இப்போது மௌனமாக இருக்கின்றார். கடந்த பாராளுமன்ற சபை அமர்வின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா ஆபத்து பற்றி உரையாற்றிய போது, சுகாதார அமைச்சர் பவித்ரா அவரின் உரையை மலினப்படுத்தினார். “முகமூடிகளும் தேவை இல்லை. எதுவும் தேவை இல்லை. நாட்டிற்குள் கொரோனாவை நுழைய அனுமதிக்கமாட்டோம். எனினும், நாங்கள் சுற்றுலாத் துறைக்கு இடமளிப்போம்” எனக் கூறினார். இன்று நடந்திருப்பது என்ன?” இவ்வாறு அவர் கேள்வியெழுப்பினார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS