வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமையின் அடிப்படையிலேயே அமெரிக்க தூதரக அதிகாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளை செய்யாது வெளியேறியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதில் தவறேதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,-
அமெரிக்க தூதரக அதிகாரி ராஜதந்திர சிறப்புரிமைகளின் அடிப்படையில் செயற்பட்டுள்ளார். அவர் விமான நிலையத்தில் எந்த தவறையும் செய்யவில்லை இப்படியான சட்டங்கள் இருக்கின்றன. சாதாரணமாக தூதரக அதிகாரிகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் போது தனிமைப்படுத்துவதாக பொறுப்பு ஏற்றே அமெரிக்க தூதரகம் அழைத்துச் சென்றுள்ளது.
அந்த அதிகாரியின் ராஜதந்திர சிறப்புரிமைக்கு இதனை செய்தாக வேண்டும். நாங்கள் வெளிநாடுகளுக்கு சென்றாலும் இப்படித்தான்.
எமது தூதுவர் அல்லது அதிகாரி ஒருவர் அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுக்கு பதவியேற்க சென்றால் இதே சிறப்புரிமை அவர்களுக்கும் உண்டு.
அமெரிக்காவில் இருந்து மாத்திரமல்ல கியூபாவில் இருந்து வந்தாலும் இதே நிலைமைதான். சோவியத் நாட்டில் இருந்து வந்தாலும் இதுதான் நடைமுறை.
இது அவர்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டின் பெறுமதி என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிகாரியின் செயலை வன்மையாக கண்டிப்பதாக கூறியிருந்தார்.
அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தவும், கொரோனா வைரஸை இலங்கையில் பரப்பவும் அவர் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார் என்ற சந்தேகம் இருப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment