"பொத்துவில் மண்மலைப் பிரதேசத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தொல்லியல் செயலணியினர் எல்லை மீறி நில அளவையில் ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு, குடியிருப்பாளர்களை பலாத்காரமாக அங்குள்ள விகாராதிபதிகள் வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள். அதேவேளை, தொல்லியல் பிரதேசம் என்ற பேரில் முஸ்லிம்களின் காணிகளை பறிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது." இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், மக்கள் காங்கிரஸ் சார்பில் திகாமடுல்ல (அம்பாரை) மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமாகிய எம்.ஏ.எம்.தாஹீர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணி தமது பணியை ஆரம்பித்துள்ளது. அச்செயலணி கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் உள்ள தொல்லியல் பிரதேசங்களை நில அளவை செய்யும் வேலைத் திட்டத்தை மேற்கொண்டது. இதன்போது, நில அளவை பொது மக்களின் குடியிருப்பு பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு அரசவர்த்தமானி அறிவித்தலுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்படுவதாக, பொத்துவில் பிரதேச மக்கள் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த எல்லை மீறலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொத்துவில் பிரதேச மக்களின் காணிகள் காலத்திற்கு காலம் தொல்லியல் பிரதேசம் என்றும், வன இலாகாவுக்குரிய காணி என்றும் பல பெயர்களில் பறிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச மக்கள் வருடா வருடம் காணிகளை இழந்துகொண்டு வரும் துர்ப்பாக்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பொத்துவில் பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அமைச்சர்களாக இருந்த போதிலும், அவர்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை.
தற்போது ஜனாதிபதியினால் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச்செயலணி தமது பணியை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளது. இங்கு மண்மலை பிரதேசத்தில் நில அளவையில் ஈடுபட்டுள்ள செயலணியினர் எல்லை மீறி செயற்பட்டுக்கொண்டதாக பொத்துவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
1965ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி அறிவித்தலில், பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் 30 ஏக்கர் 03ரூட் 02 பேர்ச்சஸ் காணி தொல்லியல் பிரதேசத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொத்துவில் முஹுது மஹா விகாரையின் விகாராதிபதிகள் 1956ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியின் பிரகாரம், 72 ஏக்கர் காணி தொல்லியல் பிரதேசமாக இருப்பதாக அதிகாரிகளை கட்டாயப்படுத்தி, அதனை அளவீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்கள். இதனை தொடர்ந்து நில அளவையில் ஈடுபட்டவர்கள் 72 ஏக்கர் காணியை அளவீடு செய்துள்ளனர். இதன்போது பொது மக்களின் குடியிருப்பு பிரதேசங்களும் உள்ளடங்கியுள்ளன. நில அளவீடு செய்து கொள்ளப்பட்டுள்ள 72 ஏக்கர் நிலப் பிரதேசத்திற்குள் வரும் குடியிருப்பாளர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததோடு, காணிகளில் உள்ள மரக் கன்றுகளையும் பிடுங்கி வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் தடையாக இருக்கமாட்டார்கள். கடந்த காலங்களில் முஹுது மஹா விகாரையை பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்கள்தான் பாதுகாத்து வந்துள்ளார்கள். ஆதலால், பொது மக்களின் குடியிருப்புக்களை தொல்லியல் என்ற பேரில் அபகரித்துக்கொள்ள எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பொது மக்களின் குடியிருப்புக்களையும் தொல்லியல் பிரதேசம் என்று விகாராதிபதியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அளவீடு செய்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது அங்குள்ள குடியிருப்பாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். தாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வரும் வீடு வாசல்களை இழந்து, நடுவீதிக்கு வந்திடுமோ என்று அச்சமடைந்துள்ளார்கள். ஆதலால், ஜனாதிபதி இவ்விவகாரத்தில் 1965ஆம் ஆண்டின் அரச வர்த்தமானியை பின்பற்றுமாறு செயலணியினரை பணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS