முஸ்லிம்களின் ஜனாஸாக்களை  தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்காக வாக்குக் கேட்கும் முஸ்லிம் வியாபாரிகள், உண்மையாகவே கலிமாச் சொல்லியிருந்தால், தமது அறியாமையை உணர்ந்து, உடனடியாக பிரசார நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கோரியுள்ளார்.

தொடர்ந்தும் இவ்வாறு முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீடுவீடாக அலைவதும், பெரிய ஹோட்டல்களில் முஸ்லிம்களை பலாத்காரமாக அழைத்து கூட்டம் போடுவதும், வெட்கக் கேடான செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டிகளில், பொதுக் கூட்டங்களுக்கு 500 பேருக்கு மேல் அழைக்கப்படக் கூடாதென்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், இந்த மொட்டு முஸ்லிம் ஏஜெண்டுகளும், கொந்தராத்துக்காரர்களும், குருநாகலில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்களுக்குச் சென்று, அவர்களின் பெயரை பதிவு செய்து, வலுக்கட்டாயமாக கூட்டத்துக்கு அழைக்கின்றார்கள்.

இலங்கை வரலாற்றிலே, ஏன் உலக வரலாற்றில் கூட, ராஜபக்ஷ அரசாங்கம்தான் “முஸ்லிம்களின் ஜனஸாக்களை எரித்த ஆட்சி” என்று முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரை, அவரது இருக்கையிலிருந்து தூக்கியெறிந்தவர்களுக்கு, ஜே.எம்.ஒ (JMO) வினரை கட்டுப்படுத்த முடியாதா? இவர்கள் யாருக்கு கதை சொல்கின்றார்கள்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க, ஒவ்வொரு ஊடகவியலாளர் மாநாட்டின் போதும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) வழிகாட்டிக்கிணங்கவே தாங்கள் செயற்படுவதாகக் கூறுகின்றார். ஆனால், உலக சுகாதார ஸ்தாபனத்தினதும், 187 நாடுகளினதும் வழிகாட்டிக்கும், விதிமுறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் மாற்றமாக, ஜானாஸாக்களை மட்டும் எரிக்கின்றார்கள். 

மொட்டுவில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றிபெறப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சஜித் பிரேமதாஸவின், ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தைக் குறைப்பதற்கும், முஸ்லிம் கட்சிகளின் பலத்தைக் குறைப்பதற்கும், முஸ்லிம்களின் கடந்தகால பிரதிநிதித்துவத்தை 21 லிருந்து வெகுவாகக் குறைப்பதற்குமே, ஒவ்வொரு தொகுதிகளிலும் முஸ்லிம் வியாபாரிகளும், பண முதலைகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மொட்டுவினரால் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டு, இவர்கள் மூலம் சில ஆயிரம் முஸ்லிம்  வாக்குகளை இல்லாமலாக்கி, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும், பெரமுன ஆசனங்களை அதிகரிப்பதுமே, இந்த மொட்டுக்காரர்களின் குறிக்கோளாகும்.

எனவே, முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தலில், சிந்தித்து செயலாற்றுவதன் மூலமே, எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS