நாங்கள் இனவாதிகளோ!,  பிரதேசவாதிகளோ!, பயங்கரவாதிகளோ! அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால்  பறித்தெடுக்கப்பட்ட நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய உதப தலைவரும், முதலைப்பாளி வட்டார அமைப்பாளருமான தௌபீக் அவர்களின் ஏற்பாட்டில் தராசு சின்னத்தில் இலக்கம் 7ல் போட்டியிடும் ஆப்தீன் எஹியா அவர்களை ஆதரித்து  நேற்று (09) முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
30 வருடங்களாக நாம் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களித்தோம். ஆனால் புத்தளம் தொகுதிக்கான சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படுவதில்லை. எமது விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் தொகுதிக்கு வெளியிலுள்ள பெரும்பான்மையினரே பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். எமது விருப்பு வாக்குகளால் தெரிவானவர்கள் எமது உரிமைகளையும், அபிலாசைகளையும் பறித்தெடுப்பதிலும்,ஆக்கிரமிப்புக்களை செய்வதிலும், எமது பிராந்தியத்தில் குடியேற்றுவதிலுமே ஈடுபாடு காட்டினர்.

தற்போது எம்மிடம் எஞ்சியுள்ளது விவசாய நிலங்கள் மாத்திரமே. அனைத்து நிலங்களையும் (உப்பளக் காணிகள், அரச காணிகள், கடல் நிலங்கள்) பறித்து எமது மக்களுக்கானதைப் பறித்து சில தொழிலதிபர்களுடன் இணைந்து பங்கிட்டு இலாபம் அடைந்து கொண்டனர்.

22 ஆண்டுகள் புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதிலேயே எமது அரசியலை ஆரம்பம் செய்து வெற்றி பெறாவிட்டாலும் தேசிய பட்டியல் மூலம் நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான அதிகாரம் கிடைத்தது. அதனை துஷ்பிரயோகம் செய்தனர். எமது இனத்துக்காக இழந்த பாராளுமன்ற உறுப்புரிமையை வென்றெடுக்க எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களை முகம்கொடுக்க அவர்களால் முடியாமல் போனது. எவ்வித திட்டங்களும் அவர்களிடம்; இல்லை. இழந்த பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற கோசங்களை மாத்திரமே கைவசம் வைத்திருந்தனர்.

தற்போதும் அதே கோசங்களுடன் எம்மிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் எமது பிரச்சினைகளுக்கான எவ்விதமான தீர்வும் இல்லை.  எமது பிரச்சினைகள் என்வென்பது குறித்த தெளிவு கூட அவர்களிடம் இருக்குமா என எண்ணத் தோன்றுகின்றது.

நாம் எமது மக்களின் பிரச்சினைகளை மக்களுடன் இருந்து இணங்கண்டுள்ளோம். பொலிஸிலும், பிரதேச செயலகங்களிலும், எமது நிலை என்னவென்பது குறித்து நான் கூறி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எமது மக்களை அவர்கள் வழிநடத்துக்கின்ற விதம் என்னவென்பது பற்றி நாங்கள் தினந்தினம் காண்கிறோம். பிரதேச செயலகங்களுக்கும், பிரதேச சபைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும், என பல கிலோ மீற்றர்கள் எமது மக்கள் பிரயாணிக்க வேண்டிய நிலையே இன்றுள்ளது. எமது வாழ்வாதாரத்தை பிரயாணத்துக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுத் திட்டங்களுடனேயே நாம் தேர்தல் களத்தில் வாக்குக் கேட்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களாக ஆஸிக், அக்மல், றிபாஸ் நஸீர், பௌஸான், முன்னால் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஷாபி, முதலைப்பாளி பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் மக்கீன், செயலாளர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS