Breaking

Wednesday, January 22, 2020

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாணுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வுகண்டு, சாளம்பைக்குளம் உட்பட சுற்றுச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சுக வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

“இந்தப் பிரச்சினை, தீர்வுகாணப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தகாலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போது, அதிகாரிகள் உறுதிமொழிகளை வழங்கி, அதனை நிறுத்திய போதும் இன்னும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

வவுனியா அரச அதிபர், உதவி அரச அதிபர், பிரதேச செயலாளர், வவுனியா நகரசபை தலைவர் மற்றும் வவுனியா பிரதேச சபை தலைவர் உட்பட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்ட காலப்பகுதியில் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் நேரில் உறுதியளித்திருந்தனர். எனினும், இதற்கான தீர்வு இன்னும் கிட்டவில்லை.

இந்த மக்கள் தொடர்ந்தும் நோய்களுக்காளாகி, துன்ப நிலையில் வாழ்கின்றனர். சாளம்பைக்குளம் மற்றும் அதனை அண்டியுள்ள கிராம மக்கள் மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். எனவே, வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபை ஆகியன மக்களின் நலனை கருத்திலெடுத்து, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages