எமது வரலாற்றில் நாம் என்றுமே காணாத பாரிய அனர்த்தத்தை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளைத் தவிர உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கையும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இராணுவமும் சுகாதார ஊழியர்களும் தமது உயிரை துச்சமாக மதித்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எமது கடமையாகும். என முஸ்லிம் கவுன்சில் ஒப் ஶ்ரீலங்கா மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீன் தெரிவித்துள்ளார்
அதி தீவிரமாக பரவக்கூடிய இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த வழி தனிமைப்படுத்தல் ஆகும். இதனாலே அரசாங்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறினவர்களில் எமது சமுகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பது கவலையளிக்கிறது. நாடு பெரிய அனர்த்தத்தை எதிர் நோக்கியுள்ள இந்நிலையில் அரசாங்கத்தின் திட்டங்களை மதித்து சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது நம் கடமையாகும். பெற்றோர்களும் தம் பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற ஒன்று கூடல்களை தவிர்த்தல் வேண்டும்.
எமது சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தம்மால் முடியுமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பயன்படுத்தாத கட்டடங்களை, கல்லூரிகளை நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குதல் மிகவும் பயனளிக்கும். முஸ்லிம் கவுன்சில் தேவையான மக்களுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றது. தனவந்தர்கள் இந்நிதியத்தை பலப்படுத்த உதவ வேண்டும்
முடிந்த உதவிகளை அயலவர்களுக்கும் வழங்க வேண்டும். இவ் இக்கட்டான நிலையை எதிர் கொள்ள அனைவரினது ஒத்துழைப்பும் அவசியம். இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஊடகவியளாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு எப்பொழுதும் உண்மையான தகவல்களையே வழங்க வேண்டும். மேலும் தங்களின் சுகாதாரத்தையும் கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உலகிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இக்கொடிய தொற்றை விட்டு பாதுகாப்பைத் தருமாறு இறைவனிடம் வேண்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
إرسال تعليق