கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக அந்த அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு பொறுப்பான பணிப்பாளர் திருமதி சிம்றின் சிங் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இவர் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான விசேட சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தல் தொழில் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சுகாதார நிலையை உரிய முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன திருமதி விம்றின்சிங்கிற்கு விடயங்களை தெளிவுபடுத்தினார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் இதன் போது இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறுகிய காலம் மற்றும் நீண்டகால ரீதியில் நாட்டின் தொழிலாளர்களை உள்ளடக்கிய துறைக்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கான இந்நாட்டின் பிரதிநிதி அமைச்சரிடம் இதன் போது உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS