ஏ.ஆர். மபூஸ் அஹமட் LL.B ( Hon)

அண்மையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்ட பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சார்பாக அவரது தகப்பனார் நைனா ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் அவரது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராஸா அவர்களின் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Habeas Corpus) ஆட்கொணர்வு மணு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பிரதிவாதிகளாக போலீஸ் மா அதிபர் மற்றும் CID Director மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது மகனின் 
"Inter alia" சட்டவிரோத கைது மற்றும் தடுத்துவைப்புக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கைது மற்றும் தடுத்து வைத்தலில் இருந்து விடுவிப்பு செய்யவே இந்த மனுவின் நோக்கமாகும். இந்த மனுவின் மூலமாக நீதிமன்றம் ஒரு இடைக்கால கட்டளையை (interim order) மனுதாரர் கோரியுள்ளார்.

இது இவ்வாறிருக்க Habeas Corpus ஆட்கொணர்வு மனு என்றால் என்ன? எந்த சூழ்நிலைகளில்  இது பயன்படுத்த படுகின்றது என்பதை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.

"Habeas" இது ஒரு இலத்தீன் சொல். இதன் அர்த்தம் " உயிருடன் இருக்கிறார் " என்பதாகும். ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாக கருதினால், அந்நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது.

தனிமனித உரிமை பாதிக்கப்படும்போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.

ஆட்கொணர்வு நீதிப் பேராணை முதலில் இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது. பின்னர் கொமன்வெல்த் நாடுகளிலும், ஏனைய பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டு, தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.

ஒருவரை வேண்டுமென்றோ அல்லது தவறாக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும். அந்த சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் விடுவிக்கப்படலாம். தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளை காக்க இயலும்.

இலங்கை அரசியலமைப்பு உறுப்புரை 141 இன் மூலமாக மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு இம்மனுக்களை விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனு இலங்கையில் புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் பலமுறை இம்மனுக்கள் நீதிமன்றத்தில் மேற்கொள்ள பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த சிவில் யுத்தத்தில் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களாலும், 1970 மற்றும் 1980 களில் இலங்கையில் நடந்த JVP கலவரத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட வர்களின் உறவினர்களாலும் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டது.

*Tamboo vs The superintendent of prison 

* machchavallavan vs OIC, Army camp, plantain point Trincomale

* Rasammah vs major General perera

* chellaiah vs IGP

* Juwanis vs lathif IP stf

போன்ற வழக்குகள் பிரபலமான வழக்காகுகளாகும். 

அதிலும் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் வேட்பாளராக இருந்த சமயத்தில் யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் Habeas Corpus ஆட்கொணர்வு மணு தொடர்பான அழைப்பாணை ஒன்று தொடுக்கப்பட்டது. 

2011ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள்  பாதுகாப்பு செயலாளராக இருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பாக இந்த மணு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் கடந்த 24 ம் திகதி  செப்டம்பர் மாதம் 2019 ம் ஆண்டு மேல்முறையீட்டு நீதிபதி டீபாலி விஜயசுந்தர யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் தொடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு  எதிராக  பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி interim order இடைக்கால கட்டளை ஒன்றை பிறப்பித்தது.

ஏ ஆர் மபூஸ் அஹமட். 

மூலாதாரங்கள் : 
1. daily ft 18. 04. 2020
2. இணையம்.
3. பிரபல வழக்குகள்.

Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS