மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முசலியில் இன்று (01) இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

“இவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றிபெறமாட்டார்கள் என துல்லியமாக தெரிந்த போதும், இந்தக் களப்பரீட்சையில் அவர்கள் இறக்கப்டுவதன் காரணம், சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி எவ்வாறாவது ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டால், தாங்கள் விரும்பியபடி அரசாங்கத்தை கொண்டுசெல்லலாம் என நினைப்பதனாலேயாகும்.

முசலி பிரதேசத்தைப் பொறுத்தவரையில், காடாகிப் போய்க்கிடந்த முசலி பிரதேசம் மீண்டும் பொலிவுடனும் நிமிர்ந்தும் காட்சி தருவதற்கு, இறைவனின் உதவியால் நமக்குக் கிடைத்த அரசியல் பலமும் அதிகாரமுமே பேருதவியாக இருந்தது.

யுத்தம் முடிவின் பின்னர், நாம் இங்கு வந்த போது, கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கிடந்தன. அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்தது. அவற்றை வேறுபடுத்துவதிலும் எல்லையிடுவதிலும் பாரிய கஷ்டங்கள் இருந்தன. அத்துடன், மக்களை மீளக்குடியேற்றுவதிலும் கட்டிடங்களை மீளஅமைப்பதிலும் நாம் சவால்களை எதிர்கொண்டோம். நான்காம் கட்டையிலிருந்து அரிப்பு மற்றும் மறிச்சுக்கட்டி வரையிலான, பொலிவிழந்து கிடந்த அத்தனை கிராமங்களையும் முடிந்தளவு மீளக்கட்டியெழுப்பினோம். வாழ்விடங்களை இழந்த மக்களை மீளக்குடியேற்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தோம். அத்துடன், அன்றாடம் வாழ்வதற்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்ற மனநிறைவு எமக்கு இருக்கின்றது. 

இத்துடன் எமது பணி நின்றுவிடவில்லை. புதிய புதிய கிராமங்களை உருவாக்கி எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்கு வித்திட்டோம்.  இறைவனின் நாட்டத்தால் கிடைத்த அதிகாரம், அமைச்சுப் பதவி அனைத்தையும் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் மக்கள் நல்வாழ்வுக்காக பயன்படுத்தியுள்ளோம்.

தற்போது தேர்தல் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள்  இந்தப் பிரதேசத்துக்கு தலைகாட்டத் தொடங்கியுள்ளனர். தாங்கள் வெற்றிபெறப் போவதில்லை என தெளிவாகத் தெரிந்திருந்தும், வன்னி மாவட்டத்தில் எம்.பியாக இருக்கும் என்னை இல்லாமலாக்குவதே அவர்களின் பிரதான இலக்கு. இனவாத தேரர்களுக்கும் இதுவேதான் தேவை. இந்தக் கொந்தராத்தை கொடுத்தவர்களுக்கும், அதனை எடுத்தவர்களுக்கும் இதுவேதான் தேவை. சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதே இவர்களின் நோக்காக இருக்கின்றது” என்றார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, டொக்டர் அனீஸ், ஷரீப் அலியார் மற்றும் ஹால்தீன் ஆகியோரும் உரையாற்றினர்



Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS