தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  


Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS